இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: சிதறியது பாகிஸ்தான் அணி


துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ஏமாற்றம் அளித்தது.

ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. 'வேகப்புயல்' பூஜா வஸ்திராக்கருக்கு பதிலாக 'ஆப்-ஸ்பின்னர்' சஜீவன் சஜனா வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் சரிவு: இந்திய அணியின் அபார பந்துவீச்சில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. ரேணுகா சிங் 'வேகத்தில்' குல் பெரோசா (0) போல்டானார். அமின் (8), ஒமைமா (3) நிலைக்கவில்லை. முனீபா அலி, 17 ரன்னுக்கு நடையை கட்டினார். அலியா ரியாஸ், 4 ரன்னுக்கு வெளியேற, 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்து தத்தளித்தது.


அவசரப்பட்ட கேப்டன் பாத்திமா சனா (13), ஆஷா பந்தை அடிக்க, அதை விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஒரு கையால் பிடிக்க, பரிதாபமாக அவுட்டானார். தனிநபராக போராடிய நிதா தர், அணி 100 ரன் எட்ட உதவினார். இவர், 28 ரன்னுக்கு அருந்ததி பந்தில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் சயிதா அரூப் ஷா (14*) கைகொடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் அருந்ததி 3, ஷ்ரேயங்கா 2 விக்கெட் வீழ்த்தினர்.


நிதான ஆட்டம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மந்தனா (7) ஏமாற்றினார். பின் ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக ஆடினர். ஷபாலி 32 ரன் (35 பந்தில்) எடுத்தார். இந்தியா 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 79 ரன் எடுத்து வலுவாக இருந்தது. 16வது ஓவரை வீசிய பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா 'வேகத்தில்' ஜெமிமா (23 ரன், 28 பந்து), ரிச்சா கோஷ் (0) வரிசையாக அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. அடுத்து வந்த தீப்தி சர்மா ஒரு ரன் எடுக்க, சனாவின் 'ஹாட்ரிக்' கனவு தகர்ந்தது.


ஹர்மன்பிரீத் காயம்: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சேர்ந்து சுலபமாக ரன் சேர்த்தனர். நிதா தர் வீசிய பந்தை ஹர்மன்பிரீத் அடித்தார். அதை பிடித்த கீப்பர் முனிபா, 'ஸ்டம்பிங்' செய்ய முயற்சித்தார். அப்போது 'கிரீசிற்கு' திரும்ப முயன்ற ஹர்மன்பிரீத் கீழே விழுந்தார். அவரது கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து 29 ரன்னுக்கு (24 பந்து) 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். அடுத்து வந்த சஜனா, நிதா தர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி சர்மா (7), சஜனா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் பாத்திமா சனா, 2 விக்கெட் வீழ்த்தினார்.



58 'டாட் பால்'


இந்திய வீராங்கனைகள் நேற்று துல்லியமாக பந்துவீசினர். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 29 ரன் தான் எடுத்தது. இந்திய பவுலர்கள், எதிரணி ரன் எடுக்க முடியாத வகையில், 58 'டாட் பால்' வீசினர்.



மந்தமான ஆட்டம்
'ஏ' பிரிவில் 4வது இடத்தில் உள்ள இந்திய அணியின் ரன் ரேட் மைனசில் (-1.217) உள்ளது. நேற்று பாகிஸ்தான் நிர்ணயித்த சுலப இலக்கை (106), 11.2 ஓவரில் எட்டியிருந்தால், ரன் ரேட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், ஷபாலி, ஜெமிமா, ஹர்மன்பிரீத் என அனைவரும் மந்தமாக ஆடினர். விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ஓடி ஒரு ரன்னை, இரண்டாக மாற்ற தவறினர். முதல் போட்டியில் இலங்கையை வென்ற பாகிஸ்தான், ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளது.

அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிராக இந்தியா 'மெகா' வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

காயத்தின் நிலை
மந்தனா கூறுகையில்,''கேப்டன் ஹர்மன்பிரீத்தின் கழுத்து பகுதி காயத்தை மருத்துவ குழுவினர் சோதித்து வருகின்றனர். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அணியின் 'ரன் ரேட்டை' உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் நானும் ஷபாலியும் கவனமாக இருந்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி எங்களது பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும்,''என்றார்.




வெஸ்ட் இண்டீஸ் வெற்றி


துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி (101/4, 11.4 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை (99/8, 20 ஓவர்) வீழ்த்தியது.

Advertisement