தங்கம் கடத்துவது யார்? எம்.எல்.ஏ., பேச்சுக்கு எதிர்ப்பு



திருவனந்தபுரம்: ''மலப்புரம் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்க கடத்தலில் ஈடுபடும் பெரும்பாலானோர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வான கே.டி.ஜலீல் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.


இங்குள்ள மலப்புரம் மாவட்டம், கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வாயிலாக, அதிக அளவில் தங்க கடத்தல் நடப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதை தொடர்ந்து, தன் வார்த்தைகள் திரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், ஆளுங்கட்சியை சேர்ந்த தாவனுார் எம்.எல்.ஏ.,வான கே.டி.ஜலீல் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:



கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வாயிலாக, தங்க கடத்தல், ஹவாலா போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மத பெரியவர்கள் இதை கண்டிக்க வேண்டும்.


இல்லையெனில், பிற மதத்தை சேர்ந்தவர்கள் இதை சுட்டிக்காட்டினால், அது முஸ்லிம் சமூகத்தையே இழிவுபடுத்துவதாக அமையும்.



தங்க கடத்தல் மத விரோத செயல் என, மத பெரியவர்கள் அறிவிக்க வேண்டும் என்ற கருத்தால், சிலர் வருத்தப்படுவது ஏன் என்பது வியப்பாக உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.



இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
''இது மிக மோசமான அவதுாறு. இந்த தகவல் அவருக்கு எங்கு கிடைத்தது? எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்,'' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் பி.எம்.ஏ.சலாம் கேள்வி எழுப்பியுள்ளார்.



இடதுசாரிகள் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், தங்க கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடிக்க காரணமானவருமான அன்வரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Advertisement