துல்லிய தகவல் பரிமாற்றம்: சாதித்தது இந்திய விமானப்படை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏ.டி.சி., எனப்படும், சிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை வாயிலாகவே, அனைத்து விமான போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது.



சென்னையின் வான் பரப்பில் எந்த விமானம் வரலாம், எந்த வழியை எந்தெந்த விமானம் பயன்படுத்தலாம் என்பதை, இந்த கட்டுப்பாட்டு அறை தான் முறைப்படுத்தும்.



இதுதவிர, தாம்பரம் விமானப்படை நிலையத்தில், விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, தனி கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்த இரண்டு கட்டுப்பாட்டு அறைகளும், தங்களுக்கான அதிகார வரம்பில் தனித்தனி அலைவரிசைகளில் செயல்படும்.

அலைவரிசை



இந்நிலையில், நேற்று விமான சாகசத்தை முன்னிட்டு, காலை முதல் பிற்பகல் வரை, சென்னை யில் சிவில் விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதும் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டது.


விமான சாகசத்துக்காக தற்காலிக விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறையும், இதற்கான பிரத்யேக அலைவரிசையும் ஏற்படுத்தப்பட்டது.



சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஒத்துழைப்பால், இந்த அலைவரிசை எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக செயல்பட முடிந்தது. குறிப்பாக, இந்த வான்பரப்புக்குள் வேறு எந்த விமானங்களும் குறுக்கிடாமல் பார்த்து கொள்ளப்பட்டது.

வெற்றிகரம்



சாகசத்தை முடித்த விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதில், தாம்பரம் விமானப்படை நிலையம், மெரினா கட்டுப்பாட்டு அறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு, மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த அலைவரிசை வாயிலாக, மிக மிக துல்லி யமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படியே போர் விமானங்களை, விமானிகள் நேர்த்தியாக இயக்கி, சாகச நிகழ்வை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

Advertisement