நெரிசலில் தவித்த சென்னை; கட்சிகள் கண்டனம்

சென்னை: 'விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான முன்னேற்பாடுகளை அரசு செய்யவில்லை' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும், 'திட்டமிட தெரியாத அரசு நிர்வாகம் மக்களின் நாடித்துடிப்பை அறியாது செயல்பட்டுள்ளது' என, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


ஜெயகுமார்: சுட்டெரிக்கும் வெயிலில் கடல் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளும், அவர்களது குடும்பத்தினரும் மட்டும் பல வசதிகள் உடைய பந்தலில் அமர்ந்திருப்பது, கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.


குடிநீர், உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால், ஸ்டாலின் பஸ்களை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால், போலீஸ் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.


நாராயணன் திருப்பதி: உற்சாகத்தோடு கடற்கரை நோக்கி திரண்டது மகிழ்ச்சி என்றால், அந்த மக்களின் உற்சாகத்தை, ஆர்வத்தை உணராமல், அரசு நிர்வாகம் செயலிழந்து போனது கண்டு வருத்தம் ஏற்படுகிறது.

ரயில் நிலையங்களில், பஸ்களில், மாநகர சாலைகளில் மக்கள் வெள்ளம் பெருகி வழிந்ததை, சென்னை போலீஸ் கணிக்க தவறியது அதிர்ச்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உளவுத் துறையின் தோல்வி. திட்டமிட தெரியாத அரசு நிர்வாகம் மக்களின் நாடித் துடிப்பை அறியாது செயல்பட்டிருப்பது வெட்கக்கேடு.



மக்கள் கூட்ட நெரிசலில், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததை கண்டு, மாநகராட்சி நிர்வாகம் தலைகுனிந்து நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement