ஸ்டான்லி அரசு மருத்துவமனை: குழந்தை பிரிவு கட்டடத்தில் விரிசல்

ராயபுரம்:ராயபுரம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எதிரில், எட்டு மாடி கட்டடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இங்கு, தினமும் உள்நோயாளியாக, 500க்கும் மேற்பட்ட குழந்தைகளும்; புறநோயாளிகளாக 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

அதிநவீன மருத்துவ சேவை வழங்கப்படுவதால், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

ஆனால், மருத்துவமனை கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கட்டடத்தின் பல மாடிகளின் அறைகள், விரிசல் விழுந்து அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது.

சுற்றுச்சுவர் மேற்கூரைகளிலும் விரிசல் விழுந்து, யார் மீது எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.

இது குறித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது:

கட்டடத்தின் 5வது மாடி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. டிரிப்ஸ் ஏற்றுவதற்கு கூட போதிய 'ஸ்டான்ட்' வசதிகள் இல்லாததால், செவிலியர்கள் குளுக்கோஸ் பாட்டில்களை ஜன்னல்களில் கட்டி, டிரிப்ஸ் ஏற்றுகின்றனர்.

ஒரு தளத்தில் 100க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதற்கேற்ப கழிப்பறைகள் வசதிகள் இல்லை.

மேலும், வெளியூரில் இருந்து நோயாளிகளுடன் தங்குவோருக்கு போதிய குளியலறை, கழிப்பறை வசதிகளும் இல்லாததால், பெரும் சிரமப்படுகின்றனர்.

மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லை. வெளியில் சுகாதாரமின்றி விற்கப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

எனவே, மருத்துவமனை நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் நல பிரிவு கட்டடத்தை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement