ஆம் ஆத்மி பிரமுகர் மீது துப்பாக்கி சூடு: பஞ்சாபில் பரபரப்பு

ஜலாலாபாத் : பஞ்சாபில், கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆம் ஆத்மி பிரமுகரை, அகாலி தளத்தைச் சேர்ந்த நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.


பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 13,229 கிராம பஞ்சாயத்துகளுக்கு, வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.

மோதல்



இந்நிலையில், பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தின் சக் சுலேவாலா கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆம் ஆத்மி சார்பில் மன்தீப் சிங் பிரார் போட்டியிடுகிறார். அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, அகாலி தளத்தின் தலைவர் வர்தேவ் சிங் மானின் மகன் ஹர்பீந்தர் சிங் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் சென்றார்.



ஹர்பீந்தர் மீது நில மோசடி புகார் உள்ளதால் அவரது வேட்பு மனுவை ஏற்கக்கூடாது எனக்கூறி, மன்தீப் சிங் பிரார் தலைமையில் ஆம் ஆத்மியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த வர்தேவ் சிங், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ஆம் ஆத்மி வேட்பாளர் மன்தீப் சிங்கை நோக்கி வர்தேவ் சுட்டார். இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மன்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வழக்குப்பதிவு

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி அபாய கட்டத்தில் உள்ள மன்தீப் சிங், மேல் சிகிச்சைக்காக லுாதியானா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வர்தேவ் சிங் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement