சீரமைக்கப்படாத பகிங்ஹாம் தடுப்பு சுவர் வெள்ளம் பெருக்கெடுத்தால் பேராபத்து

திருவொற்றியூர்:திருவொற்றியூர் குப்பைமேடு துவங்கி, கார்கில் நகர் கழிவெளி நிலப்பரப்பு வரையிலான, 3 கி.மீ., துாரம், பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய தார்ச்சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

சில மாதங்களுக்கு முன், நீரோட்டம் காரணமாகவும் கனரக போக்குவரத்தாலும் அழுத்தம் ஏற்பட்டு, பகிங்ஹாம் கால்வாய் பக்கவாட்டு சுவர் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.

இதில், 50 அடி நீள பக்கவாட்டு தடுப்புச் சுவர் மற்றும் தெருவிளக்கு ஒன்றும் கால்வாயில் விழுந்தது. ஆனால், தற்போது வரையில், சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த வழியாக செல்லும் வாகனங்கள், கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து ஏற்படும் என்பதால், சவுக்கு கட்டைகளை கொண்டு தற்காலிக தடுப்பு மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், நீர்நிலைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

அதுபோன்ற நேரங்களில், பகிங்ஹாம் கால்வாயிலும், 10 - 12 அடிக்கு மழைநீர் தேங்கி நின்று, எண்ணுார், திருவொற்றியூர் மேற்கு, ஆர்.கே. நகர் தொகுதியின் ஒரு பகுதி முழுவதுமாக பாதிக்கும்.

கடந்த, மிக்ஜாம் புயலின் போதும், பகிங்ஹாம் கால்வாயின் பக்கவாட்டு சுவரை மீறி, வெள்ளநீர் வழிந்தோடி பாதிப்பு ஏற்பட்டது.

நிலைமை இப்படியிருக்க, இடிந்து விழுந்த பகிங்ஹாம் கால்வாயின், 50 அடி நீள தடுப்பு சுவரை சீரமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பருவமழை துவங்கும் முன், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement