கோல்கட்டா மருத்துவமனையில் டாக்டர்கள் உட்பட 10 பேர் நீக்கம்

கோல்கட்டா: அச்சுறுத்தல், பாலியல் தொல்லை உட்பட பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்களின் அடுக்கடுக்கான புகார்களைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் உள்ளிட்ட 10 பேர் நீக்கப்பட்டனர்.



மேற்கு வங்கம் கோல்கட்டாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆக., 9ல் மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார்.

விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டது தெரியவந்ததை அடுத்து, மாநிலம் முழுதும் அதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்படுத்தித் தரக்கோரியும் பயிற்சி டாக்டர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த விவகாரத்தில், அரசுடனான பேச்சில் தீர்வு எட்டப்பட்டதை அடுத்து, பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். இதற்கிடையே, சி.பி.ஐ., விசாரணையில் திருப்தி இல்லை எனக்கூறி அவர்கள் அனைவரும் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக அங்குள்ள பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கல்லுாரி நிர்வாகத்துக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தனர். அதில், மாணவர்கள் மிரட்டப்படுவதாகவும், பாலியல் ரீதியான தொல்லைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.


இதையடுத்து, கல்லுாரி சிறப்பு கமிட்டி கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டிய நிர்வாகம், புகார்களுக்கு உள்ளான டாக்டர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேரை அதிரடியாக நீக்கியது.



பயிற்சி டாக்டர் கொலை தொடர்பான விசாரணையின் போது, கல்லுாரியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சி.பி.ஐ., கைது செய்த ஆஷிஷ் பாண்டேவும் நீக்கப்பட்டுள்ளார்.


புகார்கள் குறித்து விசாரணை கமிட்டியின் அறிக்கையை பெற்ற கல்லுாரி நிர்வாகம், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு ஆளான 49 பேருக்கு, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement