சாலையில் கழிவுநீர் தேக்கம் நந்திவரத்தில் சுகாதார சீர்கேடு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட நந்திவரம் ஒத்தவாடை தெருவில், 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இப்பகுதிக்கு, கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி, அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

இப்பகுதிக்கு, பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement