அபாய நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் மாம்பாக்கம்வாசிகள்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இது கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாகும்.

குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் மேல்நிலைக் குடிநீர் தேக்கத் தொட்டியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்புத் துகள் கலந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், தொட்டியில் ஆலமரச் செடிகள் வளர்வதால், பலவீனமடைந்து மேல்நிலைக் குடிநீர் தேக்கத்தொட்டி முழுதும் இடிந்து, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.அதற்கு முன், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய மேல்நிலைத் தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement