மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பு கழிவு நீர் ஏரியில் விடப்படுவதால் சீர்கேடு

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு காவல் துறையினருக்கு சொந்த வீடு குடியிருப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், முறையாக சுத்திகரிக்கப்படாமல் கால்வாய் வாயிலாக, அருகில் உள்ள 100 ஏக்கர் பரப்புடைய மேலக்கோட்டையூர் பெரிய ஏரியிலும், 30 ஏக்கர் பரப்புடைய முள்ளாங்கட்டி தாங்கல் ஏரியிலும் விடப்படுகிறது.

இதனால், ஏரி முழுதும் ரசாயன நுரையாக மிதக்கிறது. ஏரி நீர் மாசடைகிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது.

அதேபோல், இந்த பெரிய ஏரி அருகே ஊராட்சி சார்ந்த, மூன்று குடிநீர் கிணறுகள் உள்ளன. அந்த கிணற்றின் நீரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. அதை பருகும்போது, மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், அதே பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 6 ஏக்கர் பரப்பில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளதால், மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என, அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

அதேபோல், வாரிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட உள்ள பகுதியில், தாங்கல் நீர்நிலை உள்ளதாகவும், ஊராட்சி நிர்வாகம் சார்பில், 3.35 லட்சம் மதிப்பில், கடந்த ஐந்து மாதமாக குளம் வெட்டும் பணி நடைபெற்று வருவாகவும் கூறுகின்றனர்.

இந்த குடியிருப்பு உருவாக்கும் பணி மேற்கொண்டால், இந்த வளாகத்தில் உள்ள தாங்கல் நீர்நிலை மற்றும் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக வெட்டிய குளம் அழிக்கப்படும். மேலும், 100 மீட்டர் இடைவெளியில், தொல்லியல் சார்ந்த பகுதியும் உள்ளது என கூறுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், இந்த காவலர் குடியிருப்பில் இருந்து ஏரியில் விடப்படும் கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், மேலும், புதிய குடியிருப்பு கட்டும் பணியை நிறுத்த வேண்டும் எனவும், அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

ஏற்கனவே இருக்கும் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. முறையான வசதிகள் இல்லாததால், கழிவுநீர் நேரடியாக ஏரியில் கலக்கிறது.

இன்னும் புதிய குடியிருப்பு உருவானால், மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும். இப்பகுதி மக்களுக்கு தேவையான வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், குடியிருப்பு கட்டும் இடத்தில் சமுதாய கூடம், மருத்துவமனை, விளையாட்டு மையம் அமைத்தால் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு திட்டங்களுக்கு ஏற்கனவே பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement