குழாய் தண்ணீரில் மண்புழு கொண்டமங்கலத்தில் புகார்

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி, தெருக்குழாய்கள் வாயிலாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குழாய்களில் வரும் தண்ணீரில், சிறு சிறு புழுக்கள் வருவதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

கொண்டமங்கலம் கிராமத்தில், சன்யாசி தெருவில் குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதியில், பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி உள்ளது. பைப் லைனில் ஏற்பட்ட கசிவு காரணமாக, தண்ணீரில் மண் புழுக்கள் அதிகரித்து வருகின்றன.

அதனால், அடிக்கடி பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. தண்ணீரை பிடித்து வடிகட்டி காய்ச்சி குடிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட அலுவலகங்களில் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுப்படவில்லை.

அதிகாரிகள் தொடந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதால், உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, குழாய் இணைப்புகளை சுத்தம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement