காலிமனையில் குப்பை எரிப்பு மேற்கு தாம்பரத்தில் சீர்கேடு

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 53வது வார்டு, மேற்கு தாம்பரம், மேலாண்டை முதல் குறுக்கு தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் குப்பை சேகரிக்க, மூன்று நாட்களுக்கு ஒரு குப்பை வாகனம் செல்கிறது.

இதனால், அத்தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் வெளியேற்றப்படும் குப்பையை, மத்தியில் உள்ள காலி மனையில் கொட்டுகின்றனர்.

குப்பை, கழிவு, துணி, பிளாஸ்டிக் கவர் போன்ற குப்பையை அங்கு கொட்டி, தினசரி எரிக்கின்றனர்.

இதனால் வெளியேறும் புகை, சுற்றியுள்ள வீடுகளை சூழ்ந்து முதியவர்கள், குழந்தைகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட முதியவர்கள், அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பலமுறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள குப்பையை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தொடர்ந்து கொட்டாமல் தடுக்கவும், மீறி கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்குகின்றனர்.

குப்பை புகையால் முதியவர்கள், குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் வரும் முன், இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement