ஆரோவில்லில் மாரத்தான் ஓட்டம்

வானுார்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழு சார்பில் நடந்த மனித ஒற்றுமை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் கிராம செயல்வழிக்குழுவும், ஏ.பி.எஸ்.சி.ஏ., இணைந்து மனித ஒற்றுமை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.

பொம்மையார்பாளையம் சமுதாய நலக்கூடம் எதிரில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 10 கி.மீ., ஓட்டத்தை மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குனர் ஜெரால்டு மோரீஸ் தலைமை தாங்கினார்.

தொடர்ச்சியாக இடையஞ்சாவடியில் 4 கி.மீ., ஓட்டம் துவங்கியது. இதில் 15 வயது முதல் 30 வயது வரையுள்ள பெண்கள், 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இரு ஓட்டத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரோவில் கிராம செயல்வழிக்குழு அலுவலக வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் ஒன்றிய சேர்மன் உஷா, இரும்பை ஊராட்சி தலைவர் வசந்தி கபாலி, பொம்மையார்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெகதீசன் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

10 கி.மீ., ஓட்டத்தில் முதல் பரிசாக 8,500 ரூபாய், இரண்டாம் பரிசாக 6,500 ரூபாய், மூன்றாம் பரிசாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டது.

ஆறுதல் பரிசாக 1,250 ரூபாய் வீதம் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 4 கி.மீ., ஓட்டத்திற்கு முதல் பரிசாக 4,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2,750, மூன்றாம் பரிசாக 1,500 ரூபாய் ஆறுதல் பரிசாக 750 வீதம் 10 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

Advertisement