ஒருவரின் பண்பை வணங்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை பொறுப்பாளர் ராஜராஜன் பேச்சு

உளுந்துார்பேட்டை: 'ஒருவரிடம் உள்ள சக்தியை கண்டு வணங்க வேண்டியதில்லை. அவரது பண்பை கண்டு வணங்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., மாநில சேவைத் துறை இணை பொறுப்பாளர் ராஜராஜன் பேசினார்.

உளுந்துார்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியா செல்வம் மிகுந்த நாடாக இருந்ததால் வெளிநாட்டினர் இந்தியாவை கைப்பற்ற நினைத்தனர். நம்மிடையே ஏற்றத்தாழ்வு, ஜாதிய பாகுபாடு பிரச்னையை பயன்படுத்தி நம்மை வென்றனர்.

காலையில் எழுந்தவுடன் சூரியனை வணங்குதல், பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது, பெரியோர்களை மதிப்பது என நம்மிடையே உள்ள நல்ல பண்புகளை பார்த்து ஆங்கிலேயர் வியந்தனர்.

சங்கம் என்பது தனி நபரை முன்னிலைப்படுத்துவது இல்லை, லட்சியத்தை முன்னிலைப்படுத்துவது. ஒருவரிடம் உள்ள சக்தியைக் கண்டு வணங்க வேண்டியதில்லை. அவரது பண்பை கண்டு வணங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., சுயநலமின்றி, எதிர்பார்ப்புமின்றி பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த சங்கம் தான் நுாற்றாண்டு கண்ட ஒரே சங்கம். இவ்வாறு ராஜராஜன் பேசினார்.

கூட்டத்தில் ஹிந்துத்துவா என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் காமராஜ், மாவட்ட நிர்வாகி மதன் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement