போதைப்பொருள் நடமாட்டம் என்பது அவதூறு! கவர்னரை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

34

சென்னை; போதைப்பொருள் நடமாட்டம் குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறிய கருத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, “தமிழக போலீஸார் ஒரு கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்” என்று வழக்கம்போல் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருப்பதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கவர்னர் மாளிகைக்குள்ளும், வெளியேவும் அரசியல் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி வீசுவதையும் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டு உள்ளன. 'போதையில்லா தமிழகத்தை' உருவாக்க நேர்மையான நடவடிக்கைகளை எங்கள் முதல்வரே முன்னின்று தொடர்ந்து எடுத்து வருகிறார். வரலாற்றிலேயே முதன்முறையாகப் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகளின் முதல் மாநில மாநாட்டை 2022 ஆகஸ்ட் 10ம் தேதி முதல்வர் நடத்தினார். இப்படியொரு மாநாட்டை அ.தி.மு.க., ஆட்சியில் நடத்தவே இல்லை. தி.மு.க., ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால், இன்றைக்கு போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

கவர்னர் முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல், பா.ஜ., மேடையில் நிற்பவராக தன்னை மாற்றிக் கொண்டு பச்சைப் பொய்களை பேசுவது வெட்கக்கேடானது. புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே கவர்னர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது புரியும். “கஞ்சா அல்லாத போதைப் பொருட்களை தமிழகத்தில் மத்திய அரசின் அமைப்புகளே கைப்பற்றுகின்றன” என சொன்னது வடிகட்டிய பொய் என்பது விளங்கும்.

தமிழக முதல்வர், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். போதைப் பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு காணொளி 1.5 கோடி மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களே குட்கா விற்பனைக்கு துணை போனார்கள்.குட்கா வழக்கில் சிக்கிக் கொண்டார்கள்.

அவர்கள் மீதான வழக்குக்கு அனுமதி கொடுக்கும் கோப்பை கூட ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த கவர்னர், போதைப் பொருள் ஒழிப்பு பற்றி இப்போது வாய்கிழியப் பேசுவது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதை விட, தி.மு.க., அரசின் தீவிர நடவடிக்கையைக் கொச்சைப்படுத்திப் பேசும் தார்மீக உரிமை கவர்னருக்கு இருக்கிறதா? என்று கேட்க விரும்புகிறேன்.

இந்தியா முழுவதும் கூட பா.ஜ., நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஏன் பேச மறுக்கிறார்?. போதை பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை?

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தமது அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement