இதில் போய் அரசியல் செய்றீங்களே; இ.பி.எஸ்., குற்றச்சாட்டை மறுத்த ஆர்.எஸ்.பாரதி

1

சென்னை: 'உயிரிழப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., அரசியல் செய்யக்கூடாது' என்று தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.



சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., தமிழக அரசின் செயலற்ற தன்மையால் 5 பேர் உயிரிழந்தனர். அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினைக்கக்கூடாது என்று சரமாரியாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந் நிலையில் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு குறித்து தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது;

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் பலியானவர்கள் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம். இந்த இழப்பு வருத்தமான ஒன்று. நிகழ்ச்சிக்காக எல்லாவிதமான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.

அனைவரும் குடையுடன் வரவேண்டும், தண்ணீர் பாட்டில் எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையும் மீறி சிலர் அஜாக்கிரதையாக அங்கு வந்துள்ளனர். உடல்நலம் சரியில்லாதவர்களே போயிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் உயிரிழக்க காரணம். இது வருத்தத்துக்கு உரிய ஒன்றுதான்.

என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் கூறியிருக்கிறார். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான அறிக்கையே இன்னமும் வரவில்லை.

அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறுவது தவறான ஒன்று. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசதிகள் செய்திருக்கின்றனர்.

2015ல் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா நடத்திய கூட்டத்தில் 6 பேர் பலியானதாக செய்திகள் உள்ளன. அதை எல்லாம் மறந்து விடக்கூடாது. உயிரிழப்பை வைத்துக் கொண்டு அரசியல் செய்யக்கூடாது. இதையும், அரசியலையும், தொடர்புபடுத்தி பேசக்கூடாது.

இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.

Advertisement