இங்கிலாந்து பெண்கள் அபாரம்

சார்ஜா: உலக கோப்பை 'டி-20' லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா கேப்டன் லாரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
லாரா நம்பிக்கை
தென் ஆப்ரிக்க அணிக்கு லாரா, தஸ்மின் பிரிட்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த போது தஸ்மின் (13) அவுட்டானார். அன்னகே 18 ரன் எடுத்தார்.
லாரா 42 ரன் எடுத்த போது, சோபி பந்தில் போல்டானார். தொடர்ந்து அசத்திய சோபி, மரிஜான்னேவையும் (26) போல்டாக்க, தென் ஆப்ரிக்க அணியின் ரன் வேகம் குறைந்தது.
டிரையன் (2), சுனே லஸ் (1) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன் மட்டும் எடுத்தது. அன்னெரியே (20) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்தின் சோபி, அதிகபட்சம் 2 விக்கெட் சாய்த்தார்.
சிவர் கலக்கல்
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மையா (8), டேனி வயாத் ஜோடி துவக்கம் தந்தது. அலைஸ் கேப்சே 19 ரன் எடுத்தார். அடுத்து இணைந்த நாட் சிவர், டேனி வயாத் ஜோடி, அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. கடைசி நேரத்தில் டேனி வயாத் (43) அவுட்டான போதும், இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 125/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சிவர் (48), கேப்டன் ஹெதர் நைட் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement