ஹரியானா வெற்றி: 200 நாட்களில் சாதித்தார் சைனி!

4

சண்டிகா்: ஹரியானா மாநில முதல்வராகி, வெறும் 200 நாட்களில், அரசு நலத்திட்டங்களால், மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக பெற்று, பா.ஜ.க.,வுக்கு மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் நயாப் சைனி.

ஹரியானா மாநிலத்திற்கு கடந்த அக்.,5 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது.
பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ.க., 48 தொகுதிகளில் முன்னிலை பெற்று மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைத்தது.


லோக்சபா தேர்தல் வருவதற்கு 2 மாதம் முன்னர் தான், மாநில முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டார்க்கு பதிலாக, முதல்வர் ஆனார். மனோகர்லால் கட்டார் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பின்னர் மத்திய அமைச்சர் ஆகிவிட்டார்.


லோக்சபா தேர்தல் முடிந்து 5 மாதங்களில் மாநில சட்டசபைக்கு தேர்தல் வந்துவிட்டது. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு 5 இடங்கள் தான் கிடைத்தது. 10 ஆண்டு ஆட்சியில் அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இது மாநில பா.ஜ.க.,வுக்கு மிகவும் நெருடலாக இருந்தது.

இந்த நிலையில் தான் இன்று, பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. இது ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிரான எதிர்ப்புக்களையும், கட்சிக்குள்ளும் இருந்த சவால்களையும் திறமையாக கையாண்டு வெற்றி கண்டுள்ளார் நயாப் சைனி.

பா.ஜ.க., வெற்றி குறித்து முதல்வர் சைனி கூறியதாவது:
இந்த வெற்றி, எனது பலமான தலைமைக்கும் பொறுப்புக்கும் கிடைத்த வெற்றி. நான் தோல்வி அடைந்து இருந்தால் நானே பொறுப்பு. ஆனால் இந்த போட்டியில்,எங்களது வெற்றி உண்மையான வெற்றி.

பிரதமர் மோடியில் தலைமையின் கீழ், அவரது ஆசிர்வாதம் மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த வெற்றி சாத்தியமானது. குருஷேத்திர போரில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போட்டியில் இறுதியில் தர்மமே வென்றது.
இவ்வாறு சைனி கூறினார்.

Advertisement