இரு மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜ., தலைவர்கள் சொல்வது என்ன?

11

புதுடில்லி: ஹரியானாவில் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

ஹரியானா:



பா.ஜ.,வுக்கு மீண்டும் பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியானது, வளர்ச்சிக்கான அரசியலுக்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் கிடைத்தது ஆகும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த சிறந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கட்சி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் மக்களுக்காக மட்டும் பணியாற்றவில்லை. நமது வளர்ச்சி திட்டத்தை அவர்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். இது, ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும்.


காஷ்மீர்





காஷ்மீரில் நடந்த தேர்தல் சிறப்பானது. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த முறை அதிக ஓட்டுகள் பதிவானது, ஜனநாயகம் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.காஷ்மீரில் பா.ஜ.,வின் செயல்பாட்டை கண்டு பெருமிதம் கொள்கிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என்ற உறுதியை அளிக்கிறேன். கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சிக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா



விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் பூமியான ஹரியானா, வெளிநாட்டில் சென்று ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டை அவமானப்படுத்தியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக 3 முறை மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பா.ஜ., அரசு மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும்.

சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு கொடுத்து மக்கள் ஆசிர்வதித்து உள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை போல் காஷ்மீரையும் பயங்கரவாதம் இல்லாத வளர்ச்சி அடை ந்த மாநிலமாக மாற்ற பா.ஜ., முக்கியத்துவம் அளிக்கும்.

பா.ஜ. தலைவர் நட்டா



காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. அதிக ஓட்டுகள் பதிவானது இதுவே முதல்முறை. அதிக வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றது, ஜனநாயக திருவிழாவின் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது. காஷ்மீரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் பா.ஜ., உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து எழுப்புவோம். பா.ஜ., தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு தொடர்ந்து 3வது முறையாக கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடி தலைமையிலான இரட்டை இன்ஜின் கொண்ட அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. காங்கிரசின் சமரச அரசியலை மக்கள் முற்றிலும் நிராகரித்து உள்ளனர். தொடர்ச்சியாக ஒரு அரசியல்கட்சி 3வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைத்துள்ளது. மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு கிடைத்தது தான் இந்த ஹாட்ரிக் வெற்றி. பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நட்டா கூறியுள்ளார்.

Advertisement