இந்தியாவை பலவீனப்படுத்தும் சதியில் காங்கிரசுக்கும் பங்கு: பிரதமர் மோடி

1

புதுடில்லி: '' இந்தியாவை பலவீனப்படுத்த பல்வேறு சதிச்செயல்கள் நடந்தன. அதில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு உண்டு ,'' என பிரதமர் மோடி கூறினார்.


ஹரியானாவில் ஆட்சியை 3வது முறையாக தக்க வைத்துள்ள பா.ஜ., காஷ்மீரில் ஓட்டு சதவீதத்தை அதிகரித்து உள்ளது. இதனையடுத்து தலைநகர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரிய கட்சி



இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று நவராத்திரியின் 6வது நாள். இன்றைய புனிதமான நாளில் ஹரியானாவில் 3வது முறை தாமரை மலர்ந்துள்ளது. காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது இந்திய அரசியல்சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி ஆகும். ஜம்மு காஷ்மீர் மக்கள், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அந்த மாநிலத்தில் ஓட்டு சதவீதத்தை கணக்கிட்டால், காஷ்மீரில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., உருவெடுத்து உள்ளது.



பாராட்டு




கட்சி தொண்டர்கள், ஜேபி நட்டா, முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரின் கடின உழைப்பால் ஹரியானாவில் பா.ஜ, வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மக்கள் வரலாற்றை படைத்து உள்ளனர். 1966 ல் இந்த மாநிலம் உருவாக்கப்பட்டது. அது முதல் தற்போது வரை 13 தேர்தல் நடந்துள்ளது. அதில் 10 தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஆட்சியை மக்கள் மாற்றி உள்ளனர். ஆனால், இந்த முறை, முன்பு நடந்தது போல் நடக்கவில்லை. முதல் முறையாக, இரண்டு முறை ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்த கட்சியை மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் ஆசி வழங்கி உள்ளனர்.கீதையின் நிலத்தில் உண்மையும், வளர்ச்சியும் வென்றுள்ளது

நோ என்ட்ரி



பா.ஜ, ஆட்சி அமைக்கும் இடங்கள் எல்லாம், நீண்ட நாட்களுக்கு, மக்களின் ஆசி பா.ஜ.,வுக்கு இருக்கும். மறுபுறம் காங்கிரசின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும். கடைசியாக , எந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக அக்கட்சி ஆட்சி அமைத்தது? 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2011ம் ஆண்டு அசாமில் காங்கிரஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு நாட்டில் எந்த மாநிலங்களிலும் , காங்கிரஸ் கட்சிக்கு ' நோ என்ட்ரி' போர்டை மக்கள் மாட்டினார்கள்.

முயற்சி



இந்திய சமுதாயத்தை பலவீனப்படுத்தி, அராஜகத்தை பரப்புவதன் மூலம் நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அதனால், தான் அவர்கள் பல்வேறு பிரிவினரை தூண்டி விடுகிறார்கள். தொடர்ந்து நெருப்பை பற்ற வைக்க முயற்சி செய்கின்றனர். விவசாயிகளை தூண்டி விடும் அக்கட்சியின் முயற்சியை நாட்டு மக்கள் பார்த்தனர். தேசத்துடன் இருக்கிறோம் எனக்கூறி, தற்போது அக்கட்சிக்கு ஹரியானா விவசாயிகள் உரிய பதிலடி கொடுத்து உள்ளனர். தலித்களையும், ஓபிசி பிரிவினரையும் தூண்டிவிட முயற்சி நடந்தது. ஆனால், இந்த சதியை புரிந்து கொண்ட மக்கள், நாட்டுடன் இருக்கிறோம் எனக்கூறியதுடன், பா.ஜ,விற்கு ஆதரவாக உள்ளனர்.

தடம் புரளக்கூடாது



இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகள் நடந்தன. இந்தியாவின் ஜனநாயகத்தையும், சமூக கட்டமைப்பையும் கெடுக்கவும் சதிச்செயல்கள் நடந்தன. சர்வேச அளவிலும் சதிச்செயல்கள் நடந்தன. இந்த விளையாடில், காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு. ஆனால், இத்தகைய சதி செயல்களுக்கு ஹரியானா உரிய பதிலடி கொடுத்தது. இத்தகைய சதி செயல்கள் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என ஒவ்வொரு குடிமக்களும் உறுதி ஏற்க வேண்டும். வளர்ச்சியின் பாதையில் இருந்து இந்தியா தடம் புரள்வதை அனுமதிக்கக்கூடாது.

மூன்றாவது முறை



ஹரியானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த கட்சியை ,மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் ஆசி வழங்கி உள்ளனர். இதன் மூலம் உண்மையும், வளர்ச்சியும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொய்யை தாண்டி வளர்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஹரியானாவில் 3வது முறையாக பா.ஜ., வெற்றி பெறுவதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

மூழ்கும்படகு



காஷ்மீரில், காங்கிரசால் இழப்பை சந்திக்கிறோம் என அக்கட்சியின் கூட்டாளிகள் கவலைப்பட்டனர். இன்றைய தேர்தல் முடிவுகளும் அதனையே காட்டுகிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் பாதி தொகுதிகளில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கு அதன் கூட்டணி கட்சிகளே காரணம். இதனை தவிர்த்து, மூழ்கும் படகாக உள்ள காங்கிரசை அதன் கூட்டணி கட்சிகள் எங்கு நம்புகின்றன. பல மாநிலங்களில் காங்கிரசின் மோசமான செயல்பாடுகளால் கூட்டணி கட்சிகள் பாதிக்கின்றன. கூட்டணி கட்சிகளை விழுங்கும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் உள்ளது.

கூச்சல்



சொந்த பாரம்பரியத்தை வெறுக்கும், தங்களது தேசிய அமைப்புகளை வெறுக்கும், மக்கள் பெருமைப்படும் விஷயத்தை கெடுக்கும் எண்ணம் கொண்ட நாட்டையே உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. தேர்தல் ஆணையம், போலீஸ் மற்றும் நீதித்துறை என ஒவ்வொரு நிறுவனத்தையும் கெடுக்க அக்கட்சி விரும்புகிறது. தற்போது காங்கிரஸ் போடும் கூச்சலை போன்று லோக்சபா தேர்தலுக்கு முன்பும் போட்டது. அப்போதும், அக்கட்சியினர் மற்றும் அர்பன் நக்சல்கள், தேர்தல் ஆணையத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை சென்றனர். இன்றும் அதனையே தான் செய்கின்றனர்.


நாட்டு மக்களை தவறாக வழிநடத்த அக்கட்சி முயற்சி செய்கிறது. நமது நிறுவனங்களின் பாரபட்சமற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறது. அவற்றின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயல்கிறது. இது காங்கிரசின் வழக்கம். வெட்கமின்றி இதுபோன்ற செயல்களை அக்கட்சி செய்து வருகிறது.

பயனளிக்கும்



ஹரியானாவில் உள்ள ஏழை மக்கள் இரட்டை இன்ஜீன் அரசின் செயல்பாடுகளை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வருகின்றனர். இலவச மருத்துவம் , குழாய் மூலம் குடிநீர் மற்றும் கான்கிரீட் வீடுகள் என ஏழை மக்கள் பல்வேறு வசதிகளை பெற்றுள்ளனர். தற்போது, ஹரியானாவில் அமையும் பா.ஜ., அரசு ஏழை மக்களின் நலனுக்காக இன்னும் பாடுபடும். விவசாயத்துறையில் ஹரியானா முன்னிலையில் உள்ள மாநிலம், நமது இலக்கு தெளிவாக உள்ளது. ஹரியானாவில் உற்பத்தியாகும் பொருட்களை உலக சந்தைக்கு எடுத்து செல்ல பா.ஜ., அரசு விரும்புகிறது. சமையல் எண்ணெயில் இந்தியா தன்னிறைவு பெற ஹரியானா பலம் அளிக்கிறது. இது எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள்; இவைதான் வளர்ச்சியின் 4 தூண்கள்; இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அவற்றை வலுப்படுத்துவதே எங்கள் முன்னுரிமை.

வளர்ச்சி



காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டால், அம்மாநிலம் பற்றி எரியும் என சிலர் கூறினர். ஆனால் காஷ்மீர் எரியவில்லை . மாநிலம் வளர்ந்து வருகிறது. ஊரடங்கு மற்றும் பிரிவினைவாதம் ஆகிய சகாப்தத்தில் இருந்து காஷ்மீர் வெளியேவந்துள்ளது. காஷ்மீரில் அரசியல்சாசனத்தின் ஆன்மைாவையும், பெருமையையும் ஏற்படுத்தி உள்ளோம். இதை விட அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்ன இருக்கும்.

வேகம்



நாடே முதன்மை என்ற கொள்கை அடிப்படையில் பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஏழைகளுக்காக பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம். மத்தியிலும் , ஹரியானாவிலும் ஒரு ஊழல் கூட நடக்கவில்லை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். இதற்காக மனோகர்லால் கட்டாரையும்,நயாப் சிங்சைனியையும் பாராட்டுகிறேன். மாநிலத்தன் வளர்ச்சிக்காக அவர்கள் கடுமையாக உழைத்துளளனர். இதுபோன்ற நல்லபணிகள், நல்ல எண்ணங்கள் மற்றும் சிறந்த கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கின்றனர். இதனால், நாங்கள் பணியாற்றும் வேகம் அதிகரிக்கிறது.


பா.ஜ.,வை காஷ்மீர் மக்கள் உற்சாகப்படுத்தி உள்ளனர். இந்த ஆசி, எங்களை இன்னும் சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்துகிறது. காஷ்மீர் மற்றும் ஹரியானா மக்களுக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.காஷ்மீரிலும், ஹரியானாவிலும் பா.ஜ., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஜாதி,மதத்தை தாண்டி மக்கள் நமக்காக ஓட்டளித்து உள்ளனர்.




3 முறை

கோவா, ம.பி., ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.,தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்து உள்ளது. இதற்கு பா.ஜ., தொண்டர்களின் கடின உழைப்பே காரணம்.




ஆட்சியில் இல்லாவிட்டால், காங்கிரஸ் தண்ணீரில் இருந்து வெளிய வந்த மீன் போல் துடிக்கும். இதனால் ஜாதி என்ற விஷத்தை பரப்புகிறது. 5 நட்சத்திர ஓட்டலில் வசிப்பவர்கள் ஏழைகளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.


மக்கள் அளித்த இந்த தீர்ப்பானது, இந்தியாவை உலகின் திறன் தலைநகராக மாற்றும் உறுதியை வலுப்படுத்துகிறது. இந்தியாவை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும். கடினமான முடிவுகளை எடுக்கவும் புதிய தைரியத்தை அளிக்கும். வரவிருக்கும் 5 ஆண்டுகள் இன்னும் வேகமாக வளர்ச்சி பெறும் என உறுதி அளிக்கிறேன். மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.




நிராகரிப்பு

இந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: ஹரியானாவில் நாம் பெற்ற வெற்றி மூலம் காங்கிரசின் பொய் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நமது ஓட்டு சதவீதத்தை அதிகரித்து உள்ளோம். காங்கிரஸ் என்றால் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் என்று அர்த்தம். இந்த தேர்தலை வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர். பிரதமர் மோடி தனது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளார். நாட்டிற்காக பிரதமர் ஆற்றும் பணியை ஹரியானா முடிவுகள் எடுத்து காட்டி உள்ளது. பா.ஜ., வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.











இதற்கு முன் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்த கட்சியும் தலைவர்களும்

*சிக்கிமில் சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த பவன் குமார் சாம்லிங் 1994 முதல் 2019 வரை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தார்.

* ஒடிசாவில் பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக் 2000 முதுல் 2024 வரையிலும்

*மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதி பாசு 1977 முதல் 2000 வரையிலும்

* அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரசின் ஜிகோங் அபோங் 1980 முதல் 1999ம் வரையிலும்

*திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணிக் சர்கார் 1998 முதல் 2018 வரையிலும்

* டில்லியில் காங்கிரசின் ஷீலா தீக்சித் 1998 முதல் 2013 வரையிலும்

* சத்தீஸ்கரில் பா.ஜ.,வின் ரமன் சிங் 2003 முதல் 2018 வரையிலும்

* மணிப்பூரில் காங்கிரசின் ஓக்ரம் இபோபி சிங் 2002 முதல் 2017 வரையிலும்

* அசாமில், காங்கிரசின் தரூண் சிங் 2001 முதல் 2016 வரையிலும்

* மேற்கு வங்கத்தில் 2011 முதல் தற்போது வரை திரிணமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜியும் முதல்வர் பதவியில் இருந்துள்ளனர்.

* குஜராத், ம.பி., கோவா ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ., தொடர்ந்து 3வது முறை ஆட்சியை தக்க வைத்தது.


Advertisement