சதம் விளாசினார் ஹர்வன்ஷ்

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்டில், இந்தியாவின் ஹர்வன்ஷ் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 492 ரன் குவித்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய யூத் அணி (19 வயதுக்குட்பட்ட), இரு போட்டி கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1--0 என முன்னிலையில் உள்ளது. 2வது போட்டி சென்னையில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில், இந்திய அணி 316/5 ரன் எடுத்திருந்தது. கேப்டன் சோஹம் பட்வர்தன் (61), ஹர்வன்ஷ் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் சோஹம் பட்வர்தன் (63) அவுட்டாக, ஹர்வன்ஷ் (117) சிறப்பாக விளையாடி சதம் கடந்தார். பின் வரிசையில் முகமது (26), சமர்த் நாகராஜ் (20) ஓரளவு கைகொடுத்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 492 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின் முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணி 2வது நாள் முடிவில் 142/3 ரன் எடுத்து, 350 ரன் பின்தங்கி இருந்தது. ஆலிவர் (62), அலெக்ஸ் (45) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement