நகராட்சி ஊழியர் பி.எப்., நிதி ரூ.9.75 கோடி கையாடல்

விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சியில், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த, தொழிலாளர் சேமநல நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. நகராட்சி உள்ளாட்சி தணிக்கை துறையினர் நேற்று முன்தினம் தணிக்கை மேற்கொண்டனர். நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி முன்னிலையில், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.

அதில், 2021ம் ஆண்டு முதல், நகராட்சி ஊழியர்களின் பி.எப்., தொகை 9.75 கோடி ரூபாய் முறைகேடாக, தனிநபரின் வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமையில், போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். புகாருக்கு உள்ளான நகராட்சி டேட்டா என்ட்ரி ஒப்பந்த ஊழியர் விழுப்புரம் அ.தி.மு.க., பிரமுகர் வினீத், 25, நேற்று மாலை, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். வினீத், இந்த முறைகேட்டிற்கும் தனக்கும் தொடர்பில்லை என தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

Advertisement