லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே மாமூல் கொடுக்க முயற்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிக்கினார்

சேலம்:சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம், 58. இவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை சந்தித்தார்.

அப்போது, 'எங்கள் அலுவலகத்தில் சோதனை செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவித்தீர்கள் என்றால் மாதந்தோறும், 50,000 ரூபாய் தருகிறோம். தற்போது முன்பணம், 1 லட்சம் ரூபாய் தருகிறோம்' என்றார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜிடம், இன்ஸ்பெக்டர் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டரை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட சதாசிவம், 'என் மகன் அசோக்குமார், 1 லட்சம் ரூபாயை, கருப்பூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டலில் சந்தித்து தருவார். நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.,க்கு தகவல் கொடுத்தார்.

தொடர்ந்து அவரின் அறிவுறுத்தல்படி, இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றார். டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் மறைந்திருந்தனர்.

நள்ளிரவு, 12:00 மணிக்கு அங்கு வந்த அசோக்குமார், இன்ஸ்பெக்டரை சந்தித்து, 1 லட்சம் ரூபாயை கொடுத்தார். அப்போது போலீசார், கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

அசோக்குமாரிடம் விசாரித்தபோது, 'தந்தை ஊரில் உள்ளார்' என்றார். அதன்படி போலீசார், அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சென்று, சதாசிவத்தைச் சுற்றி வளைத்தனர்.

பின், சேலம், வின்சென்ட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சதாசிவம், உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement