அரையிறுதியில் இந்திய அணி * ஆசிய டேபிள் டென்னிசில் அபாரம்

அஸ்தானா: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறி, இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது.
கஜகஸ்தானில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான காலிறுதியில் இந்தியா, தென் கொரியா மோதின. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் உலகத் தரவரிசையில் 92வது இடத்திலுள்ள இந்தியாவின் ஆயிஹா, 3-1 என (7-11, 11-6, 12-10, 12-10), 16 வது இடத்திலுள்ள ஜியீ ஜியோனை வென்றார்.
இந்தியாவின் மணிகா பத்ரா, 2-3 என (11--13, 4--11, 11--6, 11--7, 10--12), யுபின் ஷினிடம் போராடி தோற்றார். அடுத்த போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா, 0-3 என (6-11, 10-12, 8-11) யுன்ஹீயிடம் தோற்க, இந்தியா 1-2 என பின் தங்கியது.
பின் மாற்று ஒற்றையர் போட்டி நடந்தன. இம்முறை மணிகா பத்ரா, 3-2 என (12-14, 13-11, 11-5, 5-11, 12-10) என ஜியீ ஜியோனை வீழ்த்தினார். ஸ்கோர் 2-2 என ஆனது.
கடைசி ஒற்றையரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆயிஹா, மீண்டும் அசத்தினார். இவர் 3-2 என (11-9, 7-11, 12-10, 7-11, 11-7), உலகின் 'நம்பர்-8' வீராங்கனை யுபின் ஷினை சாய்த்தார். முடிவில் இந்திய அணி 3-2 என வெற்றி பெற்று, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்து, வரலாறு படைத்தது.

Advertisement