டில்லியில் வெல்ல இந்தியா 'ரெடி' * இன்று வங்கத்துடன் 2வது மோதல்

புதுடில்லி: இளம் இந்திய படை மீண்டும் மிரட்ட காத்திருக்கிறது. இரண்டாவது 'டி-20' போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி, தொடரை வெல்ல தயாராக உள்ளது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இன்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடக்க உள்ளது.
வலுவான அணி
கேப்டன் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி அசத்துகிறது. பேட்டிங், பவுலிங் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் துவக்க வீரராக வந்த சஞ்சு சாம்சன், 19 பந்தில் 29 ரன் விளாசினார். அபிஷேக் சர்மா (16), சூர்யகுமார் (29), ஹர்திக் பாண்ட்யாவின் (39) 'ஸ்டிரைக் ரேட்' 200க்கு மேல் இருந்தது. கடைசி கட்ட விளாசலுக்கு ரிங்கு சிங் இருப்பதால், இன்றும் வெற்றி உறுதி.
'வேகத்தில்' அர்ஷ்தீப் சிங் (3 விக்.,) மயங்க் யாதவ் (1) மிரட்டினர். 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி (3 விக்.,) கலக்கினார். வாஷிங்டன் சுந்தரும் உள்ளார். இன்று மயங்க், நிதிஷ் குமாருக்கு 'ரெஸ்ட்' கொடுக்கும்பட்சத்தில், ஹர்ஷித் ராணா, திலக் வர்மா வாய்ப்பு பெறலாம்.
மஹமதுல்லா ஓய்வு
வங்கதேச அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. கடந்த போட்டியில் 127 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ஷான்டோ மட்டுமே போராடுகிறார். முஸ்தபிஜுர், டஸ்கினின் பந்துவீச்சு எடுபடாதது பலவீனம். சீனியர் 'ஆல்-ரவுண்டர்' மஹமதுல்லா 38, இத்தொடருடன் சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இவர் கூறுகையில்,''டெஸ்டில் ஏற்கனவே ஓய்வு பெற்றேன். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியுடன் (அக். 12, ஐதராபாத்) 'டி-20' அரங்கில் இருந்து விடைபெற உள்ளேன். ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்,''என்றார்.

Advertisement