வேகம் எடுக்குமா இந்திய 'பேட்டிங்'... * இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா

துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி 'மெகா' வெற்றி பெற்று, ரன் ரேட்டை உயர்த்த வேண்டும்.
ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது. இரண்டாவது சவாலில் பாகிஸ்தானை வென்றது.
இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் பலவீனம் 'பேட்டிங்' தான். முதலிரண்டு போட்டிகளில் ஷபாலி வர்மா (2, 32), துணை கேப்டன் மந்தனா (12, 7) தடுமாறினர். இவர்கள் அதிவேகமாக ரன் சேர்த்து, வலுவான துவக்கம் தர வேண்டும்.
ஹர்மன்பிரீத் சந்தேகம்
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (15, 29) ஆட்டமும் எடுபடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கழுத்து பகுதியில் காயம் அடைந்த இவர், இன்று பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. கடைசி கட்டத்தில் ஜெமிமா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் அசத்தினால் நல்லது. 'வேகத்தில்' அருந்ததி மிரட்டுகிறார். இவருக்கு ரேணுகா சிங் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 'சுழலில்' தீப்தி சர்மா சோபிக்காதது பலவீனம்.
இந்திய அணி அடுத்த போட்டியில் (அக்.13) வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ள நிலையில், இன்று இமாலய வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்போது தான் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.
சமாரி பலம்
இலங்கை அணி முதலிரண்டு போட்டிகளில் (பாகிஸ்தான், ஆஸ்திரேலியா) தோற்றது. சமீபத்திய ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவை வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. 'ஆல்-ரவுண்டரான' கேப்டன் சமாரி அத்தபத்து நம்பிக்கை அளிக்கிறார். பேட்டிங்கில் ஹர்ஷிதா, நிலாஷிகா சில்வா கைகொடுக்கலாம்.
இந்திய 'வேகப்புயல்' ரேணுகா கூறுகையில்,''களத்தில் சமாரி 'செட்' ஆகி விட்டால், சிக்கல் ஏற்படும். இவரை விரைவில் வெளியேற்ற என்னிடம் பிரத்யேக திட்டம் உண்டு,''என்றார்.

யார் ஆதிக்கம்
'டி-20' அரங்கில் இரு அணிகளும் 25 போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 19, இலங்கை 5ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

புள்ளிப்பட்டியல்
'ஏ' பிரிவு

முதல் இரண்டு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணியின் ரன் ரேட் மைனசில் உள்ளதால், இன்று எழுச்சி காண வேண்டும்.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
ஆஸி., 2 2 0 4 2.524
பாக்., 2 1 1 2 0.555
நியூசி., 2 1 0 2 -0.050
இந்தியா 2 1 1 2 -1.217
இலங்கை 2 0 2 0 -1.667

Advertisement