சித்தா, ஆயுர்வேத மருந்துகளை தவறாக விளம்பரப்படுத்தினால் நடவடிக்கை

1

புதுடில்லி :'சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தீராத நோய்களையும் தீர்க்கும்' என்பது போன்ற விளம்பரங்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அபராதம்



இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆயுஷ் அமைச்சகம் எந்த ஒரு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களின் மருந்துகளுக்கு அங்கீகாரமோ, விற்பனை செய்யும் உரிமமோ வழங்குவதில்லை.

மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களுக்கான சட்டப்படி, விற்பனை அனுமதியை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே வழங்கும்.

'ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருந்துகள் அற்புதங்களை நிகழ்த்தும், தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும்' என்பது போன்று விளம்பரங்கள் செய்வது சட்டப்படி குற்றம்.

இத்தகைய விளம்பரங்கள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே இது போன்ற விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும்.

விளம்பரம்



சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருந்துகளில், இ1 வகையில் பட்டியலிடப்பட்ட ரசாயனங்கள் கலந்திருந்தால், அந்த மருந்து அட்டைகளில் 'மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் மருந்து எடுத்துக்கொள்க' என குறிக்க வேண்டும்.

பொது மக்கள் தாங்களாகவே சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருந்துகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருந்துகள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை பொதுமக்கள் கண்டால் மாநில அரசிடமோ, ஆயுஷ் அமைச்சகத்திடமோ புகார் அளிக்கலாம். தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement