ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையம் சென்ற ஆசிரியைக்கு பாராட்டு

திருவாடானை, : ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆசிரியைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து இணையவழியில் ஏவுகலன் அறிவியல் பற்றிய பயிற்சி வகுப்புகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்தது.

இதில் சிவாதாணு பிள்ளை உட்பட ஏராளமான விஞ்ஞானிகள் இணையவழியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

மூன்று ஆண்டுகளாக படிப்படியாக தேர்வு செய்யும் பணி நடந்தது. பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 10 நாட்கள் நேரடி பயிற்சிகள் அளிக்கப்பட்டு இறுதியாக 50 பள்ளிகளில் 56 மாணவர்கள், 10 ஆசிரியர்கள். 2 ஒருங்கிணைப்பாளர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அடுத்தகுடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பகவதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு மாணவர்களை அழைத்துச் சென்றார்.

ஆசிரியை பகவதி கூறுகையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நாட்டு ராணுவ வீரர்கள் இந்திய மாணவர்களின் திறமையை பார்த்து வியந்தனர். இந்தியாவை வல்லரசாக உருவாக்குவது ஆசிரியர்களிடமே உள்ளது. ஆசிரியர்கள் சமூக மாற்றம் எற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு கற்பித்தால் இந்தியா விரைவில் வல்லரசாகும் என்றார்.

Advertisement