தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர் வேளாண் அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது.

நெற் பயிர் முளைத்துள்ள வயல்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை வரப்புகளை வெட்டி வெளியேற்றி வருகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் தலைமையில் தேவகோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கமலாதேவி, வேளாண்மை துறை அலுவலர்கள் மாவிடுதிக்கோட்டை, திடக்கோட்டை, தளக்காவயல் உட்பட பாதிக்கப்பட்ட கிராமங்களில் தண்ணீர் நிற்கும் வயல்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் கூறுகையில், கூடுதல் மழைநீரை வெட்டி விட வேண்டும்.

மாவிடுதிக்கோட்டையில் உள்ள நெல்வயல் மேடான பகுதியில் உள்ளது. இங்கு பெய்யும் மழை தானாகவே தாழ்வான பகுதியான கடகம்பட்டி கண்மாய்க்கு சென்று விடும்.

தற்போது விவசாயிகள் தங்களது நெல்வயலில் உள்ள அதிகபடியாக நிற்கும் மழை நீரை வெட்டி விட்டால் தாழ்வான பகுதிக்கு சென்று விடும்.

இளம் நெற்பயிரில் அதிக நாள் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் நெற்பயிர்கள் விதைத்த 20 முதல் 25 நாட்களில் ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ சிங் சல்பேட் அல்லது ஐந்து கிலோ நுண்ணுரம் போட்டால் மகசூல் இழப்பை தவிர்க்கலாம் என்றும், தேவகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவிகிதம் மானியத்தில் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Advertisement