ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில் லோக் ஆயுக்தா... 'ரெய்டு!' மாநிலம் முழுதும் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

பெங்களூரு: வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக குவிந்த புகார்களை அடுத்து, கர்நாடகா முழுதும் ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று, 'ரெய்டு' நடத்தினர். இதில் கணக்கில் வராத, பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கர்நாடகாவில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடக்கும் ஊழல் குறித்து, லோக் ஆயுக்தா விசாரிக்கிறது. சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் அடிக்கடி ரெய்டு நடத்தி, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம், விலை உயர்ந்த பொருட்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.


விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பி, சொத்து சேர்த்த அதிகாரிகளை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து விடுவர். இதனால் லோக் ஆயுக்தா போலீஸ் மீது, ஊழல் அதிகாரிகளுக்கு எப்போதும், ஒரு பயம் இருக்கும்.

உத்தரவு



இந்நிலையில், மாநிலத்தில் உள்ள ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில், குறிப்பாக மாநில எல்லைகளில் இருக்கும், சோதனை சாவடிகளில் டிரைவர்களை மிரட்டி, ஆர்.டி.ஓ., அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனால், ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில் ரெய்டு நடத்தும்படி, பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்தில் இருந்து, மாவட்ட லோக் ஆயுக்தா எஸ்.பி.,க்களுக்கு உத்தரவு பறந்தது.

இதன்படி, கோலார், பீதர், விஜயபுரா, பல்லாரி, கலபுரகி உட்பட மாநிலத்தில் உள்ள ஏராளமான ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகம், ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு வரும் வழியில் உள்ள, கோலாரின் சீனிவாசப்பூர் தடிகோலா கிராஸ், முல்பாகல் நங்கள்ளி ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகளில், கோலார் லோக் ஆயுக்தா எஸ்.பி., தனஞ்ஜெயா தலைமையில் சோதனை நடந்தது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, கணக்கில் வராத 20,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நோட்டீஸ்



கர்நாடகா - தெலுங்கானா மாநில எல்லையில், பீதரின் ஹும்னாபாத் மோளகேரா சோதனை சாவடியில், எஸ்.பி., உமேஷ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.


இங்கும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கர்நாடகா - ஆந்திரா எல்லையில், பல்லாரி அருகே பி.டி.ஹள்ளி சோதனை சாவடியில், எஸ்.பி., சித்தராஜ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் கணக்கில் வராத, லட்சக்கணக்கிலான பணம் சிக்கியது.


கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் பெலகாவி, நிப்பானி கோனகொல்லி சோதனை சாவடியில், எஸ்.பி., ஹனுமந்தராயா தலைமையிலான அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையின், விஜயபுரா சடச்சனா துலாகேட் சோதனை சாவடியில் நடந்த சோதனையில் பணம் சிக்கியது.

இதுதவிர கர்நாடகா - கேரளா எல்லையில் உள்ள மங்களூரு மற்றும் மடிகேரியிலும் சோதனை நடந்தது. மேற்கண்ட இடங்களை தவிர, மாநிலத்தின் வேறு சில சோதனை சாவடிகளும், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இங்கெல்லாம் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் சிக்கியது.

'இந்த பணம் எங்கிருந்து கிடைத்தது, வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் வாங்குகிறீர்களா. அவர்களை மிரட்டி பணம் பறிக்க, உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது' என்று, ஆர்.டி.ஓ., அதிகாரிகளிடம், லோக் ஆயுக்தா போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றனர்.

இதையடுத்து, பறிமுதல் செய்த பணம் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றனர். விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப, லோக் ஆயுக்தா தயாராகி வருகிறது.

Advertisement