ராமேஸ்வரத்தில் அசுத்தம்: பக்தர்கள் முகம் சுளிப்பு

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்டு பாலிதீன் பை, கவர் புழக்கத்தால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். ராமேஸ்வரம் நகரில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், மார்க்கெட் கடைகளில் பாலிதீன் பை, கவர்கள் புழக்கம் தாராளமாக உள்ளது. இதனை தடுக்காமல் அரசின் தடை உத்தரவை காற்றில் பறக்க விட்டு அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் கோயில் ரதவீதி, திட்டக்குடி தெரு, மேலத்தெரு, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள நகராட்சி வாறுகாலில் பாலிதீன் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். எனவே புனித நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பாலிதீன் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.

Advertisement