சேதமடைந்த நாரணாபுரம் ரோடு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சிவகாசி : சிவகாசி பைபாஸ் ரோட்டில் இருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

சிவகாசி பைபாஸ் ரோடு விலக்கிலிருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இப்பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள், அச்சகங்கள் உள்ளன. தவிர கன்னிசேரி, ஆர்.ஆர்.நகர், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு பெரும்பான்மையானோர் இந்த ரோட்டினைத் தான் பயன்படுத்துகின்றனர். பள்ளி கல்லுாரி வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வந்து செல்கின்றன.

இந்நிலையில் இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் ரோட்டில் பள்ளம் இருப்பது தெரியாததால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். கனரக வாகனங்கள் தட்டு தடுமாறியே செல்கின்றன.

சேதமடைந்த இந்த ரோட்டில் அவ்வப்போது ஒட்டுப் போடும் பணி நடக்கிறது. இதனால் மீண்டும் கற்கள் பெயர்ந்து ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே நாரணாபுரம் செல்லும் ரோட்டினை முழுமையாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement