வங்கதேச கடத்தல்காரர் திரிபுராவில் சுட்டுக்கொலை

புதுடில்லி: வங்கதேசத்தில் இருந்து திரிபுராவுக்குள் ஊடுருவ முயன்றவரை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


வட கிழக்கு மாநிலமான திரிபுரா நம் அண்டைநாடான வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ளது. வங்கதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 15 பேர் அடங்கிய குழு, திரிபுராவின் சல்போகர் எல்லை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம் நாட்டின் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர், மற்ற வீரர்களை உதவிக்கு அழைத்தார்.


அப்போது, கடத்தல் கும்பல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் பி.எஸ்.எப்., வீரர் காயமடைந்தார். சுதாரித்த நம் வீரர்கள், கடத்தல்காரர்களை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், கடத்தல் கும்பல் வங்கதேசத்திற்கு தப்பி சென்றது. இதையடுத்து, நம் வீரர்கள் அப்பகுதியில் நடத்திய சோதனையில் வங்கதேச கடத்தல்காரர் ஒருவர் பலியாகி சடலமாக கிடந்தார். அந்த சடலம் மீட்கப்பட்டது.

கடத்தல் கும்பல் தாக்கியதில் கை, கழுத்தில் காயமடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர், அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Advertisement