'கஜா' புயலில் கணவர் இறந்து 6 ஆண்டாச்சு! காங்., அறிவித்த உதவித்தொகை தராமல் இழுத்தடிப்பு; கட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடக்கும் மனைவி

சேலம்: 'கஜா' புயலில் பலியான கட்டட தொழிலாளியின் மனைவிக்கு தருவதாக கூறிய உதவித்தொகையை வழங்காமல், காங்., இழுத்தடித்து வருவதால் அவர் கட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடந்து வருகிறார்.


கொடைக்கானலில் இருந்து, 7 கி.மீ.,ல் உள்ள சின்னப்பள்ளத்தில் நடந்த கட்டட பணிக்கு சென்ற, சேலம், அண்ணா நகரை சேர்ந்த ரவி, 52, ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் 45, கார்த்திக், 21, ஓமலுார், தளவாய்ப்பட்டியை சேர்ந்த சவுந்தர்ராஜ், 46, ஆகியோர், தகர ெஷட் அமைத்து, 2018 நவம்பரில் தங்கி இருந்தனர். 'கஜா' புயலால் ஏற்பட்ட கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, 4 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு, தமிழக அரசு நிவாரண தொகை வழங்கியது.

அதேபோல் காங்., சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என, அப்போதைய மாநில தலைவர் திருநாவுக்கரசு அறிவித்தார். இதை, 2018 டிச., 31ல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கடிதமாக தெரிவித்து இறப்பு, வாரிசு சான்றிதழ் பெற்று அறக்கட்டளைக்கு அனுப்பும்படி தெரிவித்திருந்தார். அவற்றை அனுப்பி, 6 ஆண்டுகளாகியும் இன்னும் உதவித்தொகை வராததால், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கலைவாணி, 42, காங்., கட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கணவரின் தினக்கூலியில், 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை கொண்ட எங்கள் குடும்பம் நடந்து வந்தது. கஜா புயலில் கணவர் இறந்த நிலையில் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்தோம். காங்., தலைவர் திருநாவுக்கரசு, 4 பேர் குடும்பத்துக்கும் தலா, 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். அதில் ஓமலுாரை சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு மட்டும், தங்கபாலு வீட்டில் வைத்து, 1 லட்சம் ரூபாய் கொடுத்தனர்.

நாங்கள் கேட்டபோது காசோலை வரவில்லை. வந்தால் தருகிறோம் என்றனர். 6 ஆண்டுகளாகியும் உதவித்தொகை வழங்கவில்லை. கேட்கும்போதெல்லாம், 'தருகிறோம்' என்றே கூறுகின்றனர். தற்போது மெரினாவில் உயிரிழந்தோருக்கு உதவித்தொகை தரப்படும் என காங்., தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் எங்களுக்கும் வழங்கினால் உதவியாக இருக்கும். வாடகை வீட்டில் இருந்தபடி வீட்டு வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். உதவித்தொகை வழங்கினால் மகன் படிப்புக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement