விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் பி.எப்., நிதி ரூ.9.75 கோடி கையாடல்; ஒப்பந்த ஊழியரிடம் விசாரணை தீவிரம்

விழுப்புரம், : விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் பி.எப்., நிதியில் 9.75 கோடி கையாடல் நடந்தததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம் நகராட்சியில், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொழிலாளர் சேம நலநிதியில் (பி.எப்., பண்ட்) முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.


அதன்பேரில், நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தணிக்கை துறையினர் நேற்று முன்தினம் தணிக்கை மேற்கொண்டனர். அதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி முன்னிலையில், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.


அதில், கடந்த 2021ம் ஆண்டு முதல், நகராட்சி ஊழியர்களின் பி.எப்., தொகை 9.75 கோடி ரூபாய் முறைகேடாக தனி நபரின் வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து, நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமையில், நேற்று விசாரணை நடத்தினர்.

புகாருக்கு உள்ளான, நகராட்சி டேட்டா என்ட்ரி ஒப்பந்த ஊழியர் விழுப்புரம் அ.தி.மு.க., பிரமுகர் வினீத், 25; நேற்று மாலை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

வினீத், இந்த முறைகேடுக்கும் தனக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement