சாம்சங் போராட்டம் சி.ஐ.டி.யு., மீது அரசு கோபம்

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண, அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கணேசன் அடங்கிய குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம், சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் ஆறு மணி நேரம் பேச்சு நடத்தியது.

ஆனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம் தொடர்வதாக, சாம்சங் நிறுவன சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். பேச்சில் உடன்படாத தொழி லாளர்கள் நேற்று, 26வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள், பத்து மணி நேரம் மேல் பேச்சு நடத்தியும், ஆளும் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்க தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வருவது, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தின் அடுத்தகட்டமாக, வரும் 21ம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சாம்சங் சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். இதனால், இம்மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை, அக். 9-

'ஒவ்வொரு நாளும் சம்பள இழப்பு தானே!'

சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ராஜா நேற்று அளித்த பேட்டி:சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், முதல்வர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.சாம்சங் ஆலை நிர்வாகத்துடனும், சி.ஐ. டி.யு., மற்றும் இதர சங்கங்கள் சார்ந்த தொழிலாளர்களிடம் பேசினோம். சி.ஐ.டி.யு., சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. சி.ஐ.டி.யு., சங்கம் பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு என்ன வருகிறதோ, அதற்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம் என, நிர்வாக தரப்பில் தெரிவித்தனர். அந்த ஒரு கோரிக்கைக்காக, தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.வேலை செய்யாத ஒவ் வொரு நாளும் சம்பளம் இழப்பாகும். முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்து, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண் டும். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement