ராம் ரஹீம் செல்வாக்கு எப்படி; படம்பிடித்து காட்டியது ஹரியானா தேர்தல்!

2

சண்டிகர்: ஹரியானா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும்படி தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் கூறியும், அந்தக் கட்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை என்பது முடிவுகளில் தெரியவந்துள்ளது.


ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட முறை பரோல் பெற்று வெளியே வந்துள்ளார்.

சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, குர்மீத் ராம் ரஹீம் சிங் பரோல் கேட்டிருந்தார். அக்.,1ம் தேதி சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது.


இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந் நிலையில், தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும் என ஜாமினில் வெளியே வந்த ராம் ரஹீம் தன் ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார். தேரா அமைப்புக்கு 1.25 கோடி உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்கள் ஹரியானாவின் 28 சட்டசபை தொகுதிகளில் பெரும்பான்மையாக இருப்பதாகவும் அந்த அமைப்பினர் கூறி வந்தனர்.


ஆனால் தேர்தல் முடிவுகளின் படி, குறிப்பிட்ட அந்த 28 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி தான் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; பா.ஜ.,வுக்கு 10 இடம் மட்டுமே கிடைத்துள்ளன. இந்திய தேசிய லோக்தளம் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். அதாவது, காங்கிரஸ் 53.57 சதவீதமும், பா.ஜ., 35.71 சதவீதமும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி 7 சதவீதமும், சுயேச்சை வேட்பாளர் 3.57 சதவீத வெற்றியும் பெற்றுள்ளனர். இதன் மூலம் ராம் ரஹீமின் செல்வாக்கு இவ்வளவுதான் என்று தெரியவந்துள்ளதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisement