போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

14

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் போராடி வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.


@1brகாஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முறையான ஊதிய உயர்வு, 8 மணிநேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தி தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது.
இதில் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அதை பொருட்படுத்தாத சி.ஐ.டி.யு., சங்கத்தினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த அரசு நிர்வாகம், நேற்று இரவோடு இரவாக போராட்ட இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலை போலீசார் மூலம் அகற்றியது. தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று போராட்ட களத்துக்கு வந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு வந்த போலீசார், 'இப்படி கூடுவது சட்டவிரோதம், கலைந்து செல்லுங்கள்' என்று கூறினர். அதை ஏற்காமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்ததால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் தொழிலாளர்கள் மணிமாறன், தயாநிதி என்ற இருவர் போராட்ட களத்திலேயே மயங்கினர்.
சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்ட களத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ''போலீசார் இவ்வளவு அக்கிரமமாக நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல,'' என்றார்.

Advertisement