அடிச்சது பம்பர் பரிசு: ஓணம் குலுக்கலில் வயநாட்டுக்கு ரூ.25 கோடி

4

திருவனந்தபுரம்: ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவு வெளியாகி உள்ளது. இதில், ரூ.25 கோடி வென்ற டிக்கெட் வயநாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கேரள லாட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெறும். அந்த வகையில் ஆக., 1ம் தேதி ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பரிசாக ரூ.25 கோடி தொகைக்கான இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500. பரிசுத்தொகையில் 10 சதவீதம் அதாவது ரூ.2.5 கோடி டிக்கெட்டை விற்ற ஏஜென்டிற்கு செல்லும். இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 20 பேருக்கும், 3வது பரிசாக ரூ.50 லட்சம் 20 பேருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பரிசுத்தொகையின் மொத்த மதிப்பு ரூ.125.54 கோடி. இதற்காக 80 லட்சம் லாட்டரி டிக்கெட்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில் 72 லட்சம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. இதற்கான குலுக்கல் இன்று (அக்.,09) நடக்கும் என அறிவிக்கப்பட்டது.



திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் மதியம் 2 மணிக்கு குலுக்கல் நடந்தது. நிதி அமைச்சர் பாலகோபால் இதனை துவக்கி வைத்தார். அதன்படி முதல் பரிசான ரூ.25 கோடி வென்ற லாட்டரி டிக்கெட்டின் வரிசை எண்: TG434222 என தெரியவந்துள்ளது. இந்த டிக்கெட்டினை வயநாட்டை சேர்ந்த ஏஜென்ட் ஜினீஸ் என்பவர் விற்பனை செய்துள்ளார். இந்த டிக்கெட்டை வாங்கியது யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement