ரத்தன் டாடாவுக்கு தீவிர சிகிச்சை!

14

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று டாடா சன்ஸ் குழுமம். இக்குழுமத்தின் தலைவராக இருந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், '' எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான வதந்தி குறித்து நான் அறிவேன். அது முற்றிலும் ஆதாரமற்றவை என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கவலை கொள்ள வேண்டாம். நான் சிறந்த மன நிலையுடன் உள்ளேன். எனது வயது காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இவ்வாறு அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் எனக்கூறப்படுகிறது. இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

டாடா குழுமத்தின் தலைவராக அவர் 1991 முதல் 2012 வரை இருந்தார். 1996 ல் டாடா டெலிசர்வீசஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை துவக்கினார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement