இந்திய பெண்கள் அணி அபாரம்: இலங்கையை வீழ்த்தியது

துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 82 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.
நல்ல துவக்கம்: 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் இந்திய அணி 41/0 ரன் எடுத்திருந்தது. இனோகா பந்தில் மந்தனா ஒரு சிக்சர் விளாசினார்.
இது, இத்தொடரில் இந்தியாவின் முதல் சிக்சர் ஆனது. சமாரி அதபத்து பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மந்தனா, 36 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது மந்தனா (50) 'ரன்-அவுட்' ஆனார். ஷபாலி 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.


ஜெமிமா ரோட்ரிக்ஸ் (16) நிலைக்கவில்லை. சமாரி, காஞ்சனா, உதேஷிகா ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 27 பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் கவுர் (52), ரிச்சா கோஷ் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்மி (0), கேப்டன் சமாரி (1), ஹர்ஷிதா (3) ஏமாற்றினர். கவிஷா (21), அனுஷ்கா (20), காஞ்சனா (19) ஓரளவு கைகொடுத்தனர். ஆஷா சோபனா பந்தில் சுகந்திகா குமாரி (1), இனோஷி பிரியதர்ஷினி (1) அவுட்டாகினர். தீப்தி சர்மா 'சுழலில்' உதேஷிகா (9) சிக்கினார்.


இலங்கை அணி 19.5 ஓவரில் 90 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
இனோகா (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, ஆஷா சோபனா தலா 3, ரேணுகா சிங் 2 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து 3 போட்டியில் தோல்வி கண்ட இலங்கையின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்தது.


27 பந்து
'டி-20' உலக கோப்பையில் அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீராங்கனை ஆனார் ஹர்மன்பிரீத் கவுர். இவர், 27 பந்தில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் 2018ல் கயானாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 31 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.
* தவிர இது, ஹர்மன்பிரீத் கவுரின் அதிவேக அரைசதம் ஆனது. இதற்கு முன் 2018ல் இலங்கைக்கு எதிராக 29 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.

98 ரன்
மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி (98 ரன்), பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பையில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் 4வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஹர்மன்பிரீத் கவுர்-ஜெமிமா ரோட்ரிஸ் ஜோடி (134 ரன், 2018, எதிர்: நியூசிலாந்து, இடம்: கயானா) உள்ளது.

20 முறை
இந்தியாவின் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி, பெண்களுக்கான 'டி-20'யில் அதிகமுறை 50 அல்லது அதற்கு மேல் 'பார்ட்னர்ஷிப்' அமைத்த ஜோடிகள் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் பெத் மூனே-அலிசா ஹீலி ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது. இரு ஜோடிகளும் தலா 20 முறை இப்படி ரன் சேர்த்தன.

மூன்றாவது வீராங்கனை
'டி-20' உலக கோப்பையில் 500 ரன்னை எட்டிய 3வது இந்திய வீராங்கனையானார் மந்தனா. இவர், 24 போட்டியில், 518 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் மிதாலி ராஜ் (726 ரன்), ஹர்மன்பிரீத் கவுர் (672) இம்மைல்கல்லை அடைந்திருந்தனர்.



தென் ஆப்ரிக்கா அபாரம்
நேற்று, துபாயில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் (40), தஸ்மின் பிரிட்ஸ் (43), மரிசான் கேப் (43) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்னுக்கு சுருண்டு, 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement