படிப்புடன் வெளியுலக திறன்களை வளர்க்க மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் அரூர், அக். 10-


படிப்புடன் வெளியுலக திறன்களை வளர்க்க
மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
அரூர், அக். 10-
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று மதியம், 3:55 மணிக்கு வந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவியரிடம் பேசிய அவர், 'நன்கு படித்து அறிவை வளர்த்துக் கொள்வதுடன், ஆசிரியர்கள் அறிவுரையை பின்பற்ற வேண்டும். பெற்றோர்களின் நிலையை அறிந்து கல்வி கற்க வேண்டும். படிப்பை தாண்டி வெளியுலக திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிளஸ் 2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில வேண்டும்' என அறிவுறுத்தினார். தொடர்ந்து பள்ளி கட்டடங்களை பார்வையிட்டார். அவரிடம் தலைமையாசிரியை ராணி பழைய ஆய்வகம் பழுதடைந்துள்ளதால் புதிதாக ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
* பாப்பிரெட்டிப்பட்டி வந்த அமைச்சர் கிளை நுாலகத்தில் ஆய்வு செய்தார். நுாலகர் கலைவாணியிடம் நுாலக உறுப்பினர்கள், புத்தகங்கள் விபரங்கள் கேட்டறிந்தார். பின் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில் மாணவ, மாணவியரிடமும், தலைமை ஆசிரியர் சித்ராவிடமும் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். நன்கு படிக்க அறிவுரை கூறி, மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அமைச்சர் மகேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வித் தரம் குறித்து மாணவர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்தல், ஆங்கிலத்தில் எழுதுதல் பள்ளி மாணவர்களிடையே எழுதும் திறனை ஆய்வு செய்து, மாணவர்கள் நல்ல முறையில் படிக்க கூறினார்.
அமைச்சரின் ஆய்வின் போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயராமன், தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் சக்தி, உமா, சரண்யா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், நகர செயலாளர் பார்த்திபன், நகர அவைத்தலைவர் தணிகை குமரன், குப்புராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement