தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை

பாகூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான டென்னிக்காய்ட் போட்டியில், 8 தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்று புதுச்சேரி வீரர்கள் சாதனை படைத்தனர்.

அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன், ஜம்மு காஷ்மீர் மாநில டென்னிக்காய்ட் சங்கம் சார்பில், 36வது தேசிய அளவிலான சப் ஜூனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த செப்., 30ம் தேதி முதல் அக்., 4ம் தேதி வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் காந்தி நகரில் நடந்தது.

புதுச்சேரி மாநிலம் சார்பாக சிறுவர் அணியில் பங்கேற்ற நிதிஷ், ஸ்ரீநாத், கோகுல், அருளானந்தம், சஷ்வின், ராகவ் ஆகியோர் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர்.

சிறுமியர் பிரிவில், காவியா, பவிஷிகா, திவ்யஸ்ரீ, சுவாதி, ரிதுபர்ணா, நிரோஷா ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றனர்.

சிறுமியர் இரட்டையர் பிரிவில் திவ்யஸ்ரீ, பவிஷிகா ஆகியோர் தங்க பதக்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் ரிதுபர்ணா, கோகுல் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா பாகூரில் நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்க தலைவர் ராமு, துணை தலைவர்கள் பச்சையப்பன், சீதானந்தம், அகில இந்திய நடுவர் அருள்பிரகாசம் ஆகியோர் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கரிகாலன், கமலி, மேலாளர் பிரகாஷ், செல்வக்குமார், அகில இந்திய நடுவர் பச்சையப்பன், சங்க செயலாளர் தினேஷ்குமார் ஆகியோரை பாராட்டினர்.

Advertisement