கணக்கன்குளம் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் மழைநீர் முழுவதும் தேக்க முடியாமல் கோடாங்கிபட்டி விவசாயிகள் சிரமம்

போடி, : கோடங்கிபட்டி கணக்கன்குளம் கண்மாய் தூர்வாராததால் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு, முள் மரங்கள், ஆகாய தாமரை வளர்ந்து மழை நீரை முழுவதும் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவிலானது கணக்கன்குளம் கண்மாய். இக் கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றில் இருந்து நீர் வருகிறது.இதன் மூலம் 500 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. இதில் இருந்து வெளியேறும் உபரிநீர் எருக்கன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. நீர் வெளியேற வடக்கு மறுகால், தெற்கு மறுகால் உள்ளன.

வடக்கு மறுகால் வழியாக எருக்கன்குளம் செல்வதால் 150 ஏக்கர் இருபோக சாகுபடியாகிறது. கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் அருகே உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

தற்போது கண்மாயில் முள் மரங்கள், ஆகாய தாமரை வளர்ந்துள்ளதால் தண்ணீரை முழுவதும் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, சாகுபடி செய்வதில் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி, மழைநீர் சேமித்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்றாததால் அவதி



முருகன், விவசாயி, கோடங்கிபட்டி : கணக்கன்குளம் கண்மாய் தூர்வாராததால் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியவில்லை.பழைய ரைஸ் மில் தெருவில் இருந்து கணக்கன்குளம் கண்மாய் வழியாக கருப்பசாமி கோயில் வரை ரோடுக்கான பாதை உள்ளது. விளை பொருட்களை விவசாயிகள் இப்பாதை வழியாக கொண்டு வருவது வழக்கம். ஷட்டர் அமைந்துள்ள பகுதியில் பாதை சிறியதாகவும், ரோடு பாதை குறுகளாகவும், இருபுறமும் முட்செடிகள் சூழ்ந்து உள்ளது. கண்மாய் சுற்றி நான்கு புறமும் தடுப்புச்சுவர், ரோடு வசதி இல்லாததால் விவசாயிகள் உரம், மருந்து, விளை பொருட்களை டிராக்டரில் கொண்டு செல்ல முடியாமல் டூவீலர், தலைச் சுமையாக கொண்டு வர வேண்டியது உள்ளது. கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தனி நபர்கள் 15 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை பயிரிட்டுள்ளனர். பொதுப்பணித்துறை கண்மாய் சர்வே செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்பை அகற்றப்படவில்லை. மழைநீரை முழுமையாக தேக்க முடியாததால் கிணறுகளின் நிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. கண்மாய் முதல் சடையால்பட்டி செல்லும் ரோடு வரை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. முறையாக சர்வே மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை கொட்டும் இடமாக மாறிய கண்மாய்



செல்லமணி. விவசாயி, கோடங்கிபட்டி: கண்மாயில் கால்நடைகள் நீர் அருந்த அமைக்கப்பட்ட படித்துறையில் பாலிதீன் குப்பைகளை கொட்டும் பகுதியாக மாறி உள்ளது. வெயில் காலங்களில் தண்ணீர் அருந்த வரும் கால்நடைகளுக்கு பாதை இல்லை. தடுப்புச்சுவர் சேதம் அடைந்து உள்ளது. கரையை உயர்த்தி, தரமான முறையில் கல் கட்டுமானமான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மதகு அமைந்துள்ள பாதையை அகலப்படுத்த வேண்டும். கரையோரம் ரோடு வசதி செய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement