ஆயுத பூஜை கொண்டாட தயாராகும் நிறுவனங்கள்

திருப்பூர் : நவராத்திரி விழாவில், ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை விழா நடக்கிறது. கொலு வழிபாட்டின், நிறைவு நாளாக சரஸ்வதி வழிபாடு கொண்டாடப்படுகிறது.

கோவில் மற்றும் வீடுகளில், கொலு வைத்துள்ளவர்கள், மட்டுமல்லாது, அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவனைகள், அரசு அலுவலகங்கள், கடைகள் என, அனைத்து இடங்களிலும், நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது.

திருப்பூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனங்கள், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயத பூஜை விழாவுக்கு தயாராகி வருகின்றன. இன்று மதியத்துக்கு மேல் வழக்கமான பணிகளை நிறுத்திவிட்டு, மெஷின்கள் துடைத்து சுத்தம் செயயப்படும். வளாகம் முழுவதும் துாய்மைப்படுத்தப்படும்.

நாளை, வாழைக்கன்று, மாவிலை தோரணம் கட்டி, செவ்வந்தி மாலைகள் சூட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து, பக்தி மணம் கமழ, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, சர்க்கரை பொங்கல், கேசரி மற்றும் சுண்டல், பொரி -கடலை, மிட்டாய் வகைள், பழவகைகள் விற்பனைக்கு, கடைகள் தயாராகி விட்டன.

சில பனியன் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், இன்றே சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும். இதன்காரணமாக, இன்று காலை முதல், அனைத்து கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement