கரடு முரடான இடத்தில் கிரிக்கெட் பண்டசோழநல்லுார் இளைஞர்கள் அவதி

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லாததால் இளைஞர்கள் கரடுமுரடான மனைப் பிரிவுகளில் பெரும் சிரமத்திற்கிடையே கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. அதனால,் அப்பகுதி இளைஞர்கள் அதே பகுதியில் விலை நிலங்களில் பிளாட் போட்டுள்ள பகுதியை தேர்வு செய்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதே இடத்தில் மாநில அளவில் கிரிக்கெட் போட்டி மற்றும் தனியார் கம்பெனி நிர்வாகத்தில் நடக்கும் விளையாட்டு போட்டிகளும் நடந்து வருகிறது.

இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த மனைப் பிரிவை, பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விளையாட்டு திடலை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து இருப்பதால் வீரர்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

மனைப்பிரிவில், எல்லை கற்கள் நடப்பட்டுள்ளதால், விளையாட்டு ஆர்வத்தில் பந்தை பிடிக்க ஓடும் இளைஞர்கள், கருங்கல்லில் மோதி விழுந்து அடிபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

கிராமப்பகுதியில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement