கிராமங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் கிராமசபை

கிராம சபை கூட்டம், குடியரசு நாள் (ஜன., 26), உலக தண்ணீர் தினம் (மார்ச் 22), தொழிலாளர் நாள் (மே 1), சுதந்திர தின விழா (ஆக., 15), காந்தி ஜெயந்தி (அக்., 2) மற்றும் உள்ளாட்சி நாள் (நவ., 1) ஆகிய ஆறு நாட்கள், தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3ன்படி கிராம சபை கூட்டத்திற்குதலைவர் வராத நிலையில் துணை தலைவரும், தலைவர், துணை தலைவர் இருவரும் வராத நிலையில், அக்கூட்டத்திற்கு வந்துள்ள உறுப்பினர்களால் விருப்பத்தேர்வு படி கூட்டத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தலைமை வகித்தல் வேண்டும்.

அரசு பரிந்துரைக்கக்கூடிய பிற துறை அலுவலர்கள், அரசின் அறிவிக்கை வாயிலாக, கிராமசபையில் பங்கேற்கலாம். கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி, தன்னிறைவு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற முக்கிய விவாதங்கள் நடைப்பெற வேண்டும். கிராம சபையில் குறைந்த பட்ச கோரம் குறிப்பிடப்பட்ட உறுபினர்கள், ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

கிராம சபையில் சராசரியான உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கைகளை தெரிவிக்க நேரம் வழங்கப்பட வேண்டும். மேலும் கோரிக்கைகள் பெறுவதை தடை செய்வதும், கோரிக்கை வைப்பவரை பேசவிடாமல் தடுப்பதும் குற்றமாகும்.

'கோரம்' இருப்பதுஅவசியம்



கிராமச் சபைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில், 10 சதவீதம் வாக்காளர்களாக இருக்க வேண்டும் அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம்.

வாக்காளர்கள் 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 50, வாக்காளர், 501 - 3,001 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் - 100, வாக்காளர்கள் 3,001 - 10 ஆயிரம் வரை கொண்ட ஊராட்சியின் கோரம் - 200 மற்றும் 10 ஆயிரத்துக்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தின் கோரம், 300 ஆகும்.

கிராம சபைக் கூட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.

கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement