திருப்புவனம் வட்டாரத்தில் வெங்காய சாகுபடி குறைந்தது

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் சின்ன வெங்காய சாகுபடி 90 சதவிகிதம் வரை குறைந்த நிலையில் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்புவனம் வட்டாரத்தில் செங்குளம், பறையங்குளம், முக்குடி, காஞ்சரங்குளம்,தவத்தாரேந்தல் உள்ளிட்ட பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. மதுரை. திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விதை வெங்காயம் வாங்கி வந்து ஏக்கருக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிடுகின்றனர். குறைந்த அளவு தண்ணீர் தேவை குறைவு என்பதால் வானம் பார்த்த பூமியான முக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 300 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வந்தது. மாவட்டத்தின் கடை கோடி கிராமங்களான இங்கு வெங்காயம் பயிரிடுவதற்கான எந்த வித ஆலோசனையையும் நோய் தாக்குதல் ஏற்பட்டால் நிவாரணம் குறித்தும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

70 முதல் 90 நாட்களுக்குள் சின்ன வெங்காயம் விளைச்சலுக்கு வந்து விடும் நன்கு விளைச்சல் கண்டால் ஏக்கருக்கு 80 மூடை (4 டன்) வரை கிடைக்கும், சின்ன வெங்காயத்திற்கு நிரந்தர விலை எதுவும் கிடைப்பதில்லை.சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல், போதிய விலை கிடைக்காதது, காட்டுப்பன்றிகள் தொல்லை உள்ளிட்டவற்றால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. 2023ல் திருப்புவனம் வட்டாரத்தில் 30 ஏக்கரில் மட்டுமே சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது .

விவசாயிகள் கூறுகையில் : சின்ன வெங்காயம் சாகுபடிக்கு அதிகாரிகள் விதை வெங்காயம், காப்பீடு உள்ளிட்ட வசதியும் செய்து தருவதில்லை. நோய் தாக்குதல் குறித்து தகவல் கொடுத்தால் அதிகாரிகள் நேரில் வருவதில்லை, போன் மூலம் ஆலோசனை கூறுகின்றனர். இதுவரை செங்குளம், பறையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை எதுவுமே கிடைக்கவில்லை, அதற்கான முயற்சிகளையும் அதிகாரிகள் எடுப்பதில்லை, என்றனர்.

Advertisement