போலீஸ் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆனது 'தினமலர்' அணி!

கோவை : கோவையில் நடந்த அனைத்து துறையினருக்கான, டி-20 கிரிக்கெட் போட்டியில், தினமலர் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

கோவை மாநகர போலீஸ், 'ஸ்பார்க்கிளிங் ஈவென்ட்ஸ்' சார்பில், அனைத்து துறையினருக்ககான டி-20 கிரிக்கெட் போட்டி, கோவையில் நடந்தது.

16 அணிகள் பங்கேற்பு



இப்போட்டியில் தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ், விமானப்படை, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம், வருமான வரித்துறை, 110 பட்டாலியன், வணிக வரித்துறை, மீடியா 11, கோவை பிரஸ் கிளப் உள்ளிட்ட, 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்டன.

இதன் இறுதிப்போட்டி நேற்று, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அணியை எதிர்த்து விளையாடியது.

தினமலருக்கு வெற்றி



'டாஸ்' வென்ற தினமலர் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் துவக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடி (60) அரை சதம் விளாசினார்.

20 ஓவர்களில் தினமலர் அணி, ஆறு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. துணை கமிஷனர் அணியின் முத்தரசன், பிரவீன் விக்னேஷ் ஆகியோர், தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

பின்னர், விளையாடிய துணை கமிஷனர் அணியினர், 16 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 78 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், டி.எல்.எஸ்., முறைப்படி, தினமலர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.

சிறந்த வீரர் விஜய்



இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய, தினமலர் அணியின் விஜய், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மூன்றாமிடத்தை கோவை மாவட்ட போலீஸ் அணியும், நான்காம் இடத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அணியும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

Advertisement